வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
பெரும்பாலான வீடுகள் நிலச்சரிவால் மண், மரங்கள் மற்றும் கழிவுகளால் மூடப்பட்டுள்ளதால் மீட்புப்பணி மிகவும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றும் நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களால் ஹெலிகாப்படரை இயக்க முடியாது. இதனால் வான்வழி மீட்பு, மற்றும் வான்வழியாக பொருட்களை கொண்டு செல்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலம் வழியாக மட்டுமே மீட்புப்பணி மேற்கொள்ள முடியும் என்பதால் மிகவும் சவாலானது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. பாலம் இழுத்துச் செல்லப்பட்டது. இது பேரிடியாகும்.- கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு
வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த காளிதாஸ், கல்யான குமார் என இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரில் இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்தவர்களை தேடுவதற்காக ராணுவம் மோப்ப நாய்களை அனுப்பி வைக்கிறது.
வயநாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மீட்டுப்பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முண்டகை பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவு சம்பவம் குறித்து எம்.பி. திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில்,
கேரளா- வயநாடு பகுதியில் நடந்துள்ள நிலச்சரிவில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவரதம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் 2 இலட்ச ரூபாய் இழப்பீடு மிகவும் குறைவானதாகும். எனவே, அதனை ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
நிலச்சரிவு ஆபத்து உள்ள மாநிலங்களாக வடகிழக்கு மாநிலங்களையே ஒன்றிய அரசு அடையாளப்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளது. கேரளாவையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்த தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் என்பதால் இதனை அலட்சியம் செய்யாமல் மீட்புப் பணிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு சம்பவத்தை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனேயே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு, நிவாரண உதவிகளை வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவுக்கு ரூ.5 கோடி உதவி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வயநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.