ஹமாஸ் போராளிக்கு இஸ்ரேல் பிணைக்கைதி முத்தம்.. டென்ஷனான நேதன்யாகு - பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க மறுப்பு
- மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
- போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
காசாவில் கடந்த 15 மாதமாக நடந்து வந்த போர் தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் ஜனவரி 19 ஆம் தேதி நிறுத்தபட்டது. இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், 15 மாதங்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
நேற்று 6 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
இதுதொடர்பாக நேதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக நேற்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட பயங்கரவாதிகளின்(பால்ஸ்தீனியர்களின்) விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது " என்று தெரிவித்துள்ளார்.
நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார். அல் ஜசீராவுக்கு பேட்டி அளித்த பாஸ்ஸெம் நயீம், "போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.