உலகம்

40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு... பாக். பாதுகாப்பு படை அறிவிப்பு

Published On 2026-02-02 07:43 IST   |   Update On 2026-02-02 07:43:00 IST
  • 145 பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம்.
  • கடுமையான வன்முறை சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளனது. இந்த சம்பவங்கள், அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வன்முறை சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து பலோசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி, பேசும் போது, "கடந்த 40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம்" என்றார். இந்த வன்முறையில் 31 பொதுமக்களும், 17 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தென் ஆசிய பயங்கரவாத தகவல் மைய (South Asia Terrorism Portal) தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுக்க 3,967 பேர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். இது 2015க்கு பிந்தைய காலக்கட்டத்தில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள, கனிம வளங்கள் நிறைந்த பலோசிஸ்தான் மாகாணத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. அப்பகுதியில் செயல்படும் பலோச் தேசியவாத அமைப்புகள், தங்களது இயற்கை வளங்களில் அதிக பங்கு மற்றும் அரசியல் உரிமைகளை கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வார இறுதியில் மாகாணத்தின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அவற்றை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் களமிறங்கின. இந்த தாக்குதல்களுக்கு "இந்திய ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்" காரணம் என பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா "அடிப்படையற்றது" என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Tags:    

Similar News