தலித், பின்தங்கியவர்களை தொடர்பு கொள்வது பாவமா?- ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கார்கே கண்டனம்
- விடுதி மாணவர்களுடன் உரையாட ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.
- அவரது காரை தடுத்து நிறுத்தி விடுதிக்கு செல்ல விடாமல் நிர்வாகம் தடுத்தது.
பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் பொதுத் தொடர்பு நிகழ்ச்சி (public interaction programme- Shiksha Nyay Samvad) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள மிதிலா பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் விடுதியில், ராகுல் மாணவர்களை சந்தித்து உரையாட இருந்தார். ஆனால் ராகுல் காந்தி காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மாணவர்களை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் தலித் மாணவர்களோடு தொடர்பு கொள்வது பாவமா? என கேள்வி எழுப்பி ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தலித், பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மணாவர்களுடன் தொடர்பு கொள்வது அரசியலமைப்புக்கு எதிரானதா?. அவர்களின் படிப்பு, தேர்வுகளுக்கான தேவைகள், வேலைகள் பற்றி அவர்களுடன் பேசுறது பாவமா?.
பீகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதை ஐக்கிய ஜனதா தளம்- பாஜக அரசு தடுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.
இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.