இந்தியா

தேர்தலில் மோசடி செய்வது எப்படி? மேட்ச் பிக்சிங் பாஜகவின் மகாராஷ்டிரா வெற்றி - ஆதாரங்களை அடுக்கிய ராகுல்

Published On 2025-06-07 12:58 IST   |   Update On 2025-06-07 12:58:00 IST
  • வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
  • மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. 

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, "மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா" என்ற தலைப்பில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

 ராகுல் காந்தி கட்டுரையின் சுருக்கம்:

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் விருப்பப்படி ஆட்களை நியமித்தனர். இது நீதித்துறைத் தலைவரை நீக்கி முறைகேடு செய்ய வழிவகுத்தது.

போலி வாக்காளர்கள் அதிகரிப்பு: 2019-ல் 8.98 கோடியாக இருந்த வாக்காளர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்தனர். ஆனால்,  வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.

மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள் தொகையே 9.54 கோடிதான் இருக்கும் நிலையில், இந்த 41 லட்சம் வாக்காளர் அதிகரிப்பு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

வாக்குப் பதிவில் வினோத மாற்றம்: மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், 7.83% (சுமார் 76 லட்சம்) வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது முந்தைய தேர்தல்களை விட மிக மிக அதிகம். குறிப்பாக, 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும், மாலை 5 மணிக்குப் பிறகு சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்குக்கு ஒரு நிமிடம் என்றாலும், 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டும்!

பாஜக வெற்றிஅதிகரிப்பு: மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்று 149 இடங்களில் 132 இடங்களை வென்றது.

ஆதாரங்களை அழிக்கும் முயற்சி: முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.

மேலும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடும் கோரிக்கையை நிராகரித்து, விதிகளைத் திருத்தி அணுகலைக் கட்டுப்படுத்தி, ஆதாரங்களை அழிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

ராகுல் காந்தி தனது கட்டுரையில், "இது கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் போன்றது. இப்படிப்பட்ட முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.  

Tags:    

Similar News