இந்தியா

வரதட்சணை கொடுமை: வீட்டின் அருகே மனைவியை கொன்று புதைத்த கணவர்

Published On 2025-06-21 11:09 IST   |   Update On 2025-06-21 11:53:00 IST
  • திருமணம் நடந்த சில நாட்களிலே அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • மீண்டும் பணம், நகை கேட்டு தனுவை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.

அரியானாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்தது தொடர்பாக கணவர், மாமியார், மாமனார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2023-ம் ஆண்டு அருண் என்பவர் தனுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் நடந்த சில நாட்களிலே அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த ஓராண்டாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த தனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கணவருடன் வாழ வந்துள்ளார். இருப்பினும் அருண் குடும்பத்தாரிடம் இருந்த பேராசை குறையவில்லை. மீண்டும் பணம், நகை கேட்டு தனுவை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, தனுவை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியிடம் பேச கணவன் வீட்டார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஏப்ரல் 23-ந்தே தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மாமியார் தனு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, தனு குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக துணை காவல் ஆணையரை சந்தித்து தனு குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

இதன்பின்னே, உண்மை வெளிவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 24 வயதான தனுவை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொன்று வீட்டின் அருகே பொதுப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் குழியில் புதைத்துள்ளனர். இதுதொடர்பாக தனுவின் கணவர், மாமனார், மாமியார், நெருங்கிய உறவினர் ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழியை தோண்டி தனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News