இந்தியா

உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 2 சிறுமிகள்: உயிரிழந்த சிறுமியின் தந்தை தற்கொலை

Published On 2024-03-07 14:53 GMT   |   Update On 2024-03-07 14:53 GMT
  • இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர்.
  • இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் பகுதியில் கடந்த வாரம் இயற்கை உபாதையை கழிக்க, வயல்வெளிக்கு இரு சிறுமிகள் சென்றுள்ளனர்.

அப்போது இந்த சிறுமிகளை செங்கல் சூளையின் காண்டிராக்டர் ராம்பூர் நிஷாத்(48), அவரது மகன் ராஜூ(18) மற்றும் உறவினர் சஞ்சய்(19) ஆகிய 3 பேர் சேர்ந்து கட்டாயமாக மது அருந்த வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரு மரத்தில் சிறுமிகள் 2 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராம்பூர் நிஷாத்-ன் செங்கல் சூளையில் தான் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், அவர்களுடைய பெற்றோரும் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தந்தையும் நேற்று வீட்டின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல்துறை தரப்பில் இது தற்கொலை தான் என்று உறுதி செய்துள்ளனர்.

பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று காவல்துறையினர் அழுத்தம் கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து செய்து கொண்டார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உ.பி.யில், இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர், இப்போது நீதி கிடைக்காததாலும், வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான அழுத்தத்தாலும், அவர்களின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ம.பி.யில், தனது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து புகார் கூறிய ஏழை கணவரின் வழக்கு நியாயமாக விசாரிக்கப்படாததால், தனது ௨ குழந்தைகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாஜகவின் டபுள் என்ஜின் ஆட்சியில் நீதி கேட்பது குற்றமாகி உள்ளது. பாஜக ஆட்சியில் ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், மந்த்சௌரிலிருந்து பவுரி வரையிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு, அவர்களின் குடும்பங்கள் நீதிக்காக போராடின

இந்த கொடூரமான அநீதிக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள், இல்லையெனில் இன்று இல்லை என்றால் நாளை இந்தக் கொடுமையின் நெருப்பு உங்களையும் சுட்டு விடும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News