இந்தியா

6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை - தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து

Published On 2025-10-08 11:43 IST   |   Update On 2025-10-08 12:45:00 IST
  • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
  • வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News