உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்த அழகிகளை படத்தில் காணலாம்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம்: ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை
- மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
- அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. நாளை கோலாகலத்துடன் தொடக்க விழா நடைபெறுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்கள், மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் போட்டி நடத்துபவர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்.
உலக அழகி போட்டியில் மொத்தம் 116 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 109 நாடுகளை சேர்ந்த உலக அழகிகள் ஐதராபாத் வந்தனர்.
ஐதராபாத் வந்துள்ள அழகிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 வாரங்களுக்கு அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு தருவது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இதனால் மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக விமான சேவையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மற்றும் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 12-ந்தேதி நாகார்ஜுன சாகரில் உள்ள புத்தவனம் ஐதராபாத் சார்மினார், லாட் பஜார், வாரங்கல் ஆயிரம் தூண் கோவில், யாதகிரி குடா, போச்சம்பள்ளி மஹபூப் நகர் ஆகிய பகுதிகளுக்கு அழகி போட்டியில் கலந்து கொள்ளும் அழகு ராணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிலர் ஐதாபாத் வீதிகளில் சுற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.