இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

Published On 2022-11-17 15:27 GMT   |   Update On 2022-11-17 15:27 GMT
  • பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  • மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருந்தது. அதேபோல் சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கு என்பதால், இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் நீதிமன்றம் மத்திய அரசை விசாரித்திருக்க வேண்டும் என மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அல்லது விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

Tags:    

Similar News