இந்தியா

கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் கருத்து தெரிவிப்பதா?: அப்பட்டமான தலையீடு என ஜெர்மனிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

Published On 2024-03-23 10:47 GMT   |   Update On 2024-03-23 11:41 GMT
  • கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர்.
  • அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும் என ஜெர்மனி அதிகாரி கருத்து.

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தன்மீது கைது போன்ற கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

அப்போது ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த, அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் உயர் அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "இதுபோன்ற கருத்துக்கள் எங்களது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், எங்களது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிட உட்படுத்துவதாகவும் பார்க்கிறோம். சட்டம் அதன் வழியில் அதன் நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விசயத்தில் ஒருதலைபட்சமான அனுமானம் மிகவும் தேவையற்றதாகும்" எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News