இந்தியா

2024 தேர்தலில் ரூ.6,268 கோடி நிதி பெற்ற பாஜக.. ரூ.1,494 கோடி செலவு - காங்கிரஸ் எவ்வளவு தெரியுமா?

Published On 2025-06-22 06:58 IST   |   Update On 2025-06-22 06:58:00 IST
  • ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.
  • தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தல், அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்(ADR) என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கை இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம் 32 கட்சிகளின் செலவின அறிக்கை ஆய்வில் அடங்கும்.

அதன்படி மேற்கூறிய மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்காக இந்த கட்சிகள் மொத்தம் ரூ.3,352 கோடி செலவு செய்துள்ளன. தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

அதிகபட்சமாக பாஜக பாராளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தேர்தல்களுக்காக சுமார் ரூ.1,494 கோடியை செலவழித்துள்ளது. இது கட்சிகளின் மொத்த செலவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி (18.5%) செலவழித்துள்ளது. இக்கட்சிகள் செலவு செய்த தொகையில் அதிகபட்ச தொகை விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.

ரூ.795 கோடி பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ரூ.402 கோடி வழங்கி உள்ளன.

2024 மக்களவை தேர்தலின் போது 5 தேசிய மற்றும் 27 பிராந்திய அரசியல் கட்சிகள் சேகரித்த மொத்த நிதி ரூ.7445.566 கோடி ஆகும். சேகரிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6930 கோடி (93.08%) வசூலித்தன. அதே நேரத்தில் பிராந்திய கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) பெற்றன.

அதிகபட்சமாக பாஜக ரூ.6268 கோடி நிதியைப் பெற்றது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 592 கோடியைப் பெற்றது, சிபிஐ(எம்) ரூ.62.74 கோடி நிதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தேர்தல் ஆணையத்தில், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), கேரளா காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் இன்னும் தங்கள் செலவின அறிக்கையை வழங்கவில்லை.

அரசியல் கட்சிகள், காசோலைகள், DD (டிமாண்ட் டிராப்ட்) அல்லது RTGS வழியாக பரிவர்த்தனைகள் செய்வதன்மூலம் மட்டுமே கருப்புப் பணப் பயன்பாடு மற்றும் செலவினங்களை மட்டுப்படுத்த முடியும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Tags:    

Similar News