காங்கிரஸ் பிளவு பட வாய்ப்புள்ளது என்பதா? பிரதமர் மோடிக்கு அசோக் கெலாட் கண்டனம்
- காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்- பிரதமர் மோடி.
- பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும்- கெலாட் பதிலடி.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களை சந்தித்து வெற்றியை அவர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசும்போது, "காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெலாட் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி பிளவு படும் என பிரதமர் மோடி கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவருடைய கருத்து முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. காங்கிரஸ் கட்சி பற்றி கருத்து கூறுவதற்கு முன், பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கூட, பாஜக கட்சியால் அதன் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது. இதற்கு பாஜக- ஆர்எஸ்எஸ் இடையிலான மோதல்தான் காரணம்.
காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டிற்கு முன் உருவாக்கிய சவால்களை கட்சியின் மூத்த தலைவர்களும் இளம் தலைவர்களும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
இவ்வாறு கெலாட் தெரிவித்து்ளளார்.