முக்கிய பகுதிகளை படிக்காமல் தவிர்த்துவிட்டார்: ஆளுநர் மீது கேரள மாநில முதல்வர் குற்றச்சாட்டு
- கேரள மாநில ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்து விட்டார்.
- சில பகுதிகளை சேர்த்து வாசித்துள்ளார் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு.
கேரள மாநிலத்தின் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும்.
ஆனால், கேரள மற்றும் தமிழ்நாடு சட்டசபைகளில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அல்லேகர் இன்று சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்தார். அப்போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். இதை கவனித்த முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சில பகுதிகளை தவிர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:-
ஆளுநர் 12-வது பத்தியின் முதல் பகுதியை வாசிக்கவில்லை அல்லது 15-வது பத்தியின் கடைசி பகுதியை முடிக்கவில்லை. 72 மக்கள் கொண்ட கொள்கை உரையில் 157 பத்திகளில் 16-வது பத்தியை இணைத்து வாசித்துள்ளார்.
மத்திய அரசு நிதி வழங்காதது மற்றும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது போன்றவற்றை தவிர்த்துள்ளார்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.