இந்தியா

சரத்பவார் காலடியில் உத்தவ் தாக்கரே சரணடைந்து விட்டார்: அமித்ஷா கடும் தாக்கு

Published On 2023-02-20 04:19 GMT   |   Update On 2023-02-20 04:19 GMT
  • நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல.
  • நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.

மும்பை :

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், 2-வது நாளாக நேற்று கோலாப்பூரில் நடந்த பா.ஜனதா கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

2019-ம் ஆண்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜனதா 48 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது.

உத்தவ் தாக்கரே கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய கட்-அவுட்டுடன் தேர்தலை சந்தித்தார்.

ஆனால் முடிவுகள் வெளியான பிறகு அவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டார்.

நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.

கடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் தலைமையில் தான் எங்கள் கூட்டணி போட்டியிட்டது. இதை நானும், பிரதமர் நரேந்திர மோடியும் பொதுக்கூட்டங்களின்போது வெளிப்படையாக தெரிவித்தோம். இருந்தபோதிலும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தார்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து வில் அம்பு சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை பாராட்டுகிறேன். உத்தவ் தாக்கரே அணியினர் தற்போது பாடம் கற்றிருப்பார்கள்.

வஞ்சகத்தால் நீங்கள் சில நாட்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றலாம். ஆனால் போர்க்களத்திற்கு வரும்போது வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு தைரியம் தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News