இந்தியா

காய்கறிகள் விலை திடீர் உயர்வு- ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.170-க்கு விற்பனை

Published On 2023-12-24 05:23 GMT   |   Update On 2023-12-24 05:23 GMT
  • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
  • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்:

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News