இந்தியா

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை பலி

Published On 2025-12-13 15:40 IST   |   Update On 2025-12-13 15:40:00 IST
  • சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை வேறொரு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.
  • இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை பஸ்ஸி பகுதி அருகே மூச்சு விடுவதில் சிரமப்பட்ட குழந்தையை, பரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பான்ஸ்கோ என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை அருகில் உள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பஸ்ஸி மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம்புலன்ஸில் எந்த ஒரு செவிலியரும் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கிக்கொண்டிருந்தார். சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்ததாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.   

Tags:    

Similar News