இந்தியா

முதல்வர் நாற்காலிக்கு முற்றிய மோதல்.. டெல்லி விரைந்த டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் - என்ன நடக்கிறது?

Published On 2025-11-21 16:23 IST   |   Update On 2025-11-21 16:23:00 IST
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
  • தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி உள்ளார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு டிகே சிவகுமாரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மறைமுறைகமாக காய் நகர்த்துகிறாரா என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.  

 

இதற்கிடையே காங்கிரஸ் அரசின் இரண்டரை ஆண்டு நிறைவை அடுத்து, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு ஆகியோர் அடங்குவர்.

அளித்த வாக்குறுதியின்படி டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்குமாறு அவரது பிரிவின் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உயர்மட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.

அவர்கள் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் நாளை காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பயணம் குறித்து சித்தராமையா விளக்கம் கேட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லி சென்று திரும்பிய டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், முதல்வர் சித்தராமையா தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று நம்புவதாகக் கூறினார். 

Tags:    

Similar News