செய்திகள்

காங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்

Published On 2019-04-22 13:24 GMT   |   Update On 2019-04-22 13:24 GMT
மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்று ஆனந்த்சர்மா கூறியுள்ளார். #anandsharma #rahulgandhi #pmmodi

பனாஜி:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன. 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தனர். அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.

நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து அதிக இடங்களில் வெற்றி பெறும்.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மோடியும், பா.ஜனதாவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது.


அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும், நமது வீரர்களின் தியாகத்தையும் அவமதித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது குறித்து காங்கிரசுக்கு பா.ஜனதா பாடம் நடத்த தேவையில்லை. காங்கிரஸ் பழமை வாய்ந்த கட்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 2 பிரதமர்களை இழந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் கூறும்போது, “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்“ என்றார். #anandsharma #rahulgandhi #pmmodi

Tags:    

Similar News