வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: மேலும் ஒரு இந்து மீது தீ வைத்த கும்பல்
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் 15 நாளில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஷரியத்பூர் மாவட்டத்தில் மேலும் ஒரு இந்து ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் 50 வயதான கோகோன் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்திய ஒரு குழு அவரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த 15 நாளில் வங்கதேசத்தில் இந்துக்கள்மீது நடத்தப்பட்ட 4-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.