செய்திகள்

அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடையாது- வேறு ஒரு பொது சின்னத்தை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-03-26 06:34 GMT   |   Update On 2019-03-26 06:34 GMT
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேறு ஒரு பொது சின்னத்தை பரிசீலிக்கும்படி கூறியுள்ளது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
புதுடெல்லி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, இடைக்கால சின்னமாக தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதிட்டது.



குக்கர் சின்னம் வழங்க முடியாததற்கான காரணத்தையும் தெரிவித்தது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி இன்று காலை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், பழைய சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குக்கர் சின்னம் வழங்க முடியாவிட்டால் வேறு ஒரு பொதுவான சின்னத்தை வழங்கும்படி டிடிவி தினகரன் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சியா? பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொது சின்னத்தை கேட்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அமமுகவை கட்சியாக இன்றே பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர், கட்சியை இன்றே பதிவு செய்தாலும், உடனடியாக குக்கர் சின்னம் தர முடியாது. கட்சியை பதிவு செய்த பின்னர், குக்கர் சின்னமோ அல்லது அவர்கள் கேட்கும் பொது சின்னத்தையோ ஒதுக்க 30 நாட்களுக்கு மேல் ஆகும் என வாதிட்டார்.

அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லையெனில் வேறு ஒரு பொது சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? என்று தலைமை நீதிபதி கூறினார். ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம். ஒரே குழுவில் உள்ளவர்களுக்கு வேறுவேறு சின்னம் வழங்கினால், அவர்களின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். எனவே, வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிந்தபிறகு பொது சின்னம் வழங்க முயற்சிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஆனால், அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு தனித்தனியாகத்தான் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டனர். குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர். அதேசமயம், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொது சின்னம் வழங்குவதற்கு பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
Tags:    

Similar News