செய்திகள்

ரபேல் விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவு - பிரதமர் மோடி மீது சிவசேனா கடும் தாக்கு

Published On 2019-02-10 10:41 GMT   |   Update On 2019-02-10 12:44 GMT
ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். #RafaleDeal #Rahulgandhi

மும்பை:

பா.ஜனதாவின் நீண்டகால கூட்டணி கட்சியாக சிவசேனா திகழ்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இக்கட்சி மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும் இடம் பெற்றுள்ளது.

இருந்தாலும் சமீபகாலமாக இந்த இரு கட்சிகளிடையே கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.

இதனால் பா.ஜனதா- சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டது. அதை விரும்பாத சிவசேனா கட்சி எம்.பி.க்கள் பா.ஜனதா கூட்டணியில் தொடர உத்தவ் தாக்கரேயிடம் வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்து வருகிறார்.

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு அனில் அம்பானி நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுத்தது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அது குறித்து பிரதமர் அலுவலகம் ரபேல் நிறுவனத்துக்கு அனுப்பியதாக ஒரு கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வமான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

“ரபேல் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவரது பேச்சில் தேச பக்தி வெளிப்பட்டது. ராணுவத்தை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்ப வில்லை என்றார். மறுநாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவணங்களை வெளியிட்டார். அதில் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டிருப்பது தெரிகிறது.

இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும். ரபேல் ஒப்பந்தம் விமான படையை பலப்படுத்துவதற்கா? அல்லது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொழில் அதிபரை காப்பாற்றுவதற்கா? .

மேலும், ரபேல் ஒப்பந்தம் குறித்து இந்தியா- பிரான்ஸ் இடையே நடந்த ஆலோசனையின் போது பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக கூறியிருப்பதை பாதுகாப்பு துறை அமைச்சகம் மறுத்தது. பிரதமர் மோடியும் திட்டவட்டமாக மறுத்தார். அப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஆனால் ராகுல் காந்தி வெளியிட்ட ஆவணங்கள் அவர்களின் தேசபக்தி கோ‌ஷங்களையும், மேஜையை தட்டி எழுப்பிய ஆரவாரத்தையும் அமைதி அடைய செய்து விட்டது.

இந்த ஒப்பந்த விவகாரத்தில் மோடி நேரடியாக தலையிட்டுள்ளார். முக்கிய பிரமுகர்களான ராணுவ மந்திரியும், ராணுவ அமைச்சக செயலாளரும் இடம் பெறவில்லை. மோடியே தன்னிச்சையாக செயல்பட்டு இருக்கிறார். ரபேல் போர் விமானத்தின் விலை மற்றும் காண்டிராக்டை யார் பெற வேண்டும் என அவரே தீர்மானித்து இருக்கிறார்.

எனவே இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை மோடி எதிர் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #Rahulgandhi

Tags:    

Similar News