செய்திகள்

மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் சந்திரசேகர ராவ் மோடியுடன் திடீர் சந்திப்பு

Published On 2018-12-26 12:19 GMT   |   Update On 2018-12-26 12:19 GMT
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்து போட்டியிட முயற்சித்துவரும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை சந்தித்தார். #ChandrasekharRao #thirdfront #parliamentpolls #ChandrashekarRaomeetsModi
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
 
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் களமிறங்கி உள்ளார்.
 
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

இந்நிலையில், நேற்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அக்கறை காட்டிவரும் சந்திரசேகர ராவை சந்திப்பதற்காக ஐதராபாத் செல்வேன் என்று உ.பி.முன்னாள் முதல் மந்தியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்திரசேர ராவ் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது, தெலுங்கானா மாநிலம் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அவர் ஆலோசித்திருப்பார் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்கள் குறிப்பிட்டனர். #ChandrasekharRao #thirdfront #parliamentpolls #ChandrashekarRaomeetsModi
Tags:    

Similar News