உள்ளூர் செய்திகள்

பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

வெள்ளகோவிலில் ஜவுளி வியாபாரி வீட்டில் நகை,பணம் கொள்ளை

Published On 2023-03-04 15:50 IST   |   Update On 2023-03-04 15:50:00 IST
  • வீட்டில் யாரும் இல்லை.
  • வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 35). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் 2-ந் தேதி இரவு இவரது தாயார் சீதாலட்சுமிக்கு கரூரில் உள்ள பல் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை நடந்ததால் கரூர் சென்று விட்டார்.ஈஸ்வரமூர்த்தியின் மனைவி சத்திய பிரியங்கா அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை.

நேற்று காலை ஈஸ்வரமூர்த்தி வீட்டின் அருகில் வேலை செய்யும் எலக்ட்ரீஷியன்கள், ஈஸ்வரமூர்த்தி வீட்டை பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன. இதுகுறித்து எலக்ட்ரீஷியன்கள் ஈஸ்வரமூர்த்திக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் செயின், தோடு, கொடி, மோதிரம் ஆகியவை சேர்த்து மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News