உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் இலவச பயணத்தை ஒட்டுமொத்த பெண்களும் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா

Published On 2022-10-02 10:35 IST   |   Update On 2022-10-02 10:35:00 IST
  • தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.
  • சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.

அவனியாபுரம்:

மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விழா காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத வகையில் அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் மக்கள் ஆம்னி பஸ்சுக்கு செல்கின்றனர்.

ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சரிடம் கேட்டால் அது தொழில் என்றும், ஏழை மக்கள் என்றால் அரசு பஸ்சில் செல்லலாம். ஆம்னி பஸ்சில் செல்வது என்றால் கட்டணம் உயர்வாகத்தான் இருக்கும் என்றும் பேசுகிறார்.

இதை சொல்வதற்கு அமைச்சர் எதற்கு? ஆம்னி பஸ்சில் பயணம் செய்தால் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு அதிக தொகையை கொடுத்து மக்கள் எப்படி பண்டிகையை கொண்டாடுவார்கள்?.

ஓசி பஸ் பயணம் குறித்து அமைச்சர் பேசியதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். அரசு பஸ்களில் இலவச பயணத்தை முற்றிலுமாக தமிழக பெண்கள் புறக்கணிக்க வேண்டும்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வரவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஒரு செங்கலை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இப்போது என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை?.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக உள்ளதே தவிர மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக தெரியவில்லை. மத்திய-மாநில அரசுகள் விரைவில் மருத்துவமனையை கட்டி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News