பலவீனமாக இருந்தாலும் அ.தி.மு.க.தான் எங்களின் முதன்மை எதிர்க்கட்சி - உதயநிதி
- என் தந்தை எல்லா இலக்குகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செய்து முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்.
- எங்கள் கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் மதிப்பு உள்ளது.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
கே: வர இருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் சக்தி வாய்ந்த போட்டியாளராக யார் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
ப: அ.தி.மு.க. எங்கள் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், இந்த தேர்தலில் வலுவான போட்டியாளர் யாரும் தெரியவில்லை. தற்போதைய பலவீனமான நிலையில் கூட தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை முதன்மை எதிர்க்கட்சியாக நாங்கள் கருதுகிறோம்.
கே: நீங்களும் ஒரு கடின உழைப்பாளி என்பதை உங்கள் தந்தை (மு.க.ஸ்டாலின்) கவனித்தாரா?
ப: நான் என்னால் முடிந்ததை செய்ய முயற்சிக்கிறேன். என்னை கலைஞர் மற்றும் தலைவருடன் (மு.க.ஸ்டாலின்) ஒப்பிட முயற்சிக்கும் கூட்டங்களில் நான் அதை ஊக்குவிப்பதில்லை. கலைஞர் எப்போதும் கலைஞர்தான். அவருக்கு 50 வருட அனுபவம் உள்ளது.
எனக்கு அரசியலில் 6 வயதுதான். என் தந்தை எல்லா இலக்குகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செய்து முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்.
கே: திருவண்ணாமலையில் நடந்த இளைஞரணி கூட்டம் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது?
ப: தி.மு.க. வடக்கு மண்டலத்தில் இருந்து 91 சட்டமன்ற தொகுதி களுக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 1.3 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அதை ஒரு வெற்றியாகவே பார்க்கிறோம்.
கே: பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதற்கு தமிழ்நாட்டிற்கு ஆணவத்துடன் வருபவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?
ப: எங்கள் முதலமைச்சரின் கூற்றுடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். பா.ஜ.க. கட்சியையும் அதன் அனைத்து 'பி' டீம்களையும் (அணி) எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மாநிலத்தில் மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. கட்சி தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
ஆனால் தமிழகம், அதன் மக்கள் மற்றும் திராவிட மாடல் அரசாங்கத்தை அவமதிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்து உள்ளனர். நிச்சயம் தமிழக மக்களால் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
கே: என்ஜின் இல்லாத கார் அ.தி.மு.க. என்றும் அதனை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுப்பதாக விமர்சித்து இருக்கிறீர்களே? தி.மு.க. ஒரு தேசிய கட்சியை சார்ந்து இல்லையா?
ப: எங்கள் கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் மதிப்பு உள்ளது. அதில் தி.மு.க. அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் மதித்து ஏற்று நடக்கிறது. எங்கள் முதலமைச்சர் ஜனநாயகத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் உள்ளடக்கிய தலைவர். எங்கள் கூட்டணி பா.ஜ.க. கூட்டணி போல் கிடையாது. டெல்லியில் ஒருதலைபட்சமாக முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் கட்சிகள் மீது திணிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எங்கள் கூட்டணி மிகவும் வித்தியாசப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.