தமிழ்நாடு செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை- கலெக்டர் உத்தரவு

Published On 2026-01-01 13:23 IST   |   Update On 2026-01-01 13:23:00 IST
  • பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கக்கூடியது.
  • வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்ப்பரவல் ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சங்கள் மற்றும் கோழி தீவனங்கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிமாக கண்காணிக்க, கேரளா எல்லையோரம் உள்ள 7 சோதனை மற்றும் தடுப்பு சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோர சோதனை-தடுப்பு சாவடி ஆகிய 8 சோதனை தடுப்பு சாவடிகளில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கக்கூடியது. வெளிநாடுகளில் இருந்து வரும் நோய் தாக்கிய வனப்பறவைகள் மூலமாகவும், இந்த நோய் நீலகிரி மாவட்டத்தில் நுழைய வாய்ப்பு உள்ளது.

எனவே பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதன்படி வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோழி, வாத்து, வான்கோழி ஆகிய பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.

இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் பண்ணை உபகரணங்களை மாதம் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பறவைகளின் தலை மற்றும் கொண்டையில் வீக்கம், கொண்டையில் நீலநிலம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, உள்ளுறுப்பு மற்றும் கால்களின் மீது ரத்தக்கசிவு ஆகியவை பறவைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள்.

இந்த நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற-இறந்த கோழிகளை கையாளுவோருக்கும் இந்த நோய் சுவாசக்காற்று மூலம் பரவக்கூடும்.

காய்ச்சல், தொண்டை புண், இருமல் ஆகியவை மனிதர்களுக்கான பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஆகும். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் இந்த நோய் பரவாது.

பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சம் மற்றும் கோழி தீவனங்களை வாகனங்களில் ஏற்றி வருவது மறுஉத்தரவு வரும்வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News