தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி: செல்லூர் ராஜூ

Published On 2026-01-01 12:06 IST   |   Update On 2026-01-01 12:06:00 IST
  • தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார்.
  • கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள்

மதுரை:

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் உண்மையான விடியல் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, அனைவருக்கும் சமமான ஆட்சி, அமைய வேண்டும் என்று அன்னை மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்தேன்.

தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை சாதித்தவர் எடப்பாடி பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்து எடை போடக்கூடாது. சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே மக்களிடம் மவுசு உண்டு. அமிதாப் பச்சன் வந்தால் கூட அதிக அளவில் கூட்டம் வரும். ஆனால் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் .

மதுரையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சியில் தி.மு.க.வினர் கொள்ளையடித்துள்ளனர் இதற்கு தீர்வே இல்லை.

மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்சினை தீராமல் உள்ளது . மதுரை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம்.

இந்த ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி போல இருக்கிறது. கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் அமேசான், சுமேட்டோ, சுகி போன்றவர்கள் வீடுகளில் பொருட்களை கொடுப்பது போல போதைப்பொருளும் வீடுகளுக்கு சப்ளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவது வேதனையளிக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்ததற்கு இதுவே சான்றாக உள்ளது.

அன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். தற்போது அந்த கட்சியில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Tags:    

Similar News