சென்னையில் 7-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
- நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தில் காலை 11.30 மணி அளவில் திரண்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.
அதனை மையப்படுத்தி தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே வேலையை செய்து வரும் உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமும் எங்களுக்கு குறைவான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தினமும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னை மாநகர போலீசார் தினமும் எங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.