உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு 5 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2024-02-23 06:57 GMT   |   Update On 2024-02-23 06:57 GMT
  • கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
  • 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.

ஏரியூர்:

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News