சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
- கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிக்கு வரும் சாலையில் உள்ள பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று முதல் மார்ச் 23-ந்தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
சென்னை:
சென்னையில் வருகிற திங்கட்கிழமை அன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடக்கும் பிரமாண்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைப்பார். இதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி நடக்கும் உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து நிகழ்ச்சிக்கு வரும் சாலைகள் உள்ள பகுதி, இதேபோல, கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிக்கு வரும் சாலையில் உள்ள பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு அருகிலுள்ள வான்வெளியைச் சுற்றி அல்லது வேறு வழியில் லேசர் கற்றை விளக்குகள், சூடான காற்று பலூன்கள் இணைக்கப்பட்ட பலூன் மற்றும் ஒளி உமிழும் பொருட்கள், பறக்கும் கிளைடர்கள் மற்றும் பிற பறக்கும் பொருட்களை வெளியிடுவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முதல் மார்ச் 23-ந்தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.