தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு தீவிரம்- எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணல்

Published On 2026-01-24 12:11 IST   |   Update On 2026-01-24 12:11:00 IST
  • தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
  • கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக களமிறங்கிய அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதா கட்சியும் வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க உள்ளன. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் சேர்ந்துள்ள நிலையில் பல்வேறு சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டி.டி.வி. தினகரன் மற்றும் பா.ம.க.வும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பது அதிரடி திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த கட்சிகளோடு சேர்ந்து அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் திகழும் 10 கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருப்பதாக அந்த கட்சியினர் கூறி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

அ.தி.மு.க.வில் சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

இதுபோன்று தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் கடந்த 10,12 ,13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்றது. இந்த நேர்காணலின்போது சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தகுதியான நபர்களை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்திருக்கிறார்.

இதன் பிறகு பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ஆகியவை இருந்ததால் நேர்காணல் உடனடியாக நடத்தப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 5-வது நாள் நேர்காணல் 24-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணலை நடத்தினார்.

இன்றைய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்ற பிறகு கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடனே வரவேற்றார்கள்.

இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

காலை 9.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வினரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.

இன்று மாலையில் திருவண்ணாமலை கிழக்கு திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் இதன் பிறகு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடைபெறுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் மக்களை கவரும் வகையில் குறிப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யார் யார் என்பதை? எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ரகசிய சர்வே மூலமாக கண்டறிந்து வைத்துள்ளார். அதுபோன்ற நபர்களில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு துடிப்பான அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது நடைபெற்று உள்ளது முதல் கட்ட நேர்காணல் என்றும் அடுத்தடுத்து 2 அல்லது 3 நேர்காணல்களை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இப்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்கிற பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்காக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. குறி வைத்து உள்ள இந்த 170 தொகுதிகள் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று ஏற்பட்டால் 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு 150 தொகுதிகளுக்கு குறையாமல் அ.தி.மு.க. களமிறங்கும் என்று தெரிகிறது.

பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 17 தொகுதிகள், டி.டி.வி. தினகரனுக்கு 7 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதேபோன்று கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்கள் வரையிலும் சில கட்சிகளுக்கு ஒரு இடம் வரையிலும் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான தொகுதி பங்கீடு விரைவில் முடிவடைந்து எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

இப்படி தொகுதி பங்கீடு முடிவடைந்ததும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.

Tags:    

Similar News