தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
- தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.
- திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், தமிழகத்திற்கு 3 ரெயில்களும் அடங்கும்.
அதாவது நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காளம் நியூ ஜல்பாய்குரி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, தாம்பரம்-சந்திரகாச்சி ஆகிய 3 ரெயில்களாகும்.
பிரதமர் மோடி நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி ஆகிய 3 வழித்தடங்களுக்கான அம்ரித் பாரத் ரெயில் சேவை மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே தொடங்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 11 தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள், 8 உட்காரும் வசதி உடைய முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரெயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் சென்டிரல், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.
இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பகல் 11.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மங்களூரு சென்றடையும். புதன்கிழமை மங்களூருவில் இருந்து காலையில் புறப்பட்டு அதே நாள் இரவு நாகர்கோவிலை வந்தடையும்.
இதேபோன்று திருவனந்தபுரத்தில் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் சேவை வரும் 28-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு 24-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.