தி.மு.க.வுடன் தே.மு.தி.க. ரகசிய பேச்சுவார்த்தையா? - பிரேமலதா பேட்டி
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள்.
- தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி வருமாறு:-
தூத்துக்குடியில் இன்று 4-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரசாரம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
கேள்வி: ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது?
பதில்: தாமதம் எல்லாம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்து விட்டார்களா? யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களா? இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நீங்கள் தான் (பிரபல பத்திரிகையாளர்கள்) அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
பிப்ரவரி 20-ந்தேதிக்கு பிறகுதான் தேர்தல் தேதியே அறிவிக்கப் போகிறார்கள். எனவே இப்போதே அவசரம் ஒன்றுமில்லை. தே.மு.தி.க. எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகம் உள்ளன. எந்த நேரத்தில் அந்த குழந்தையை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய நல்ல முடிவை எடுப்பேன்.
கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் தினமும் ஒரு செய்தியை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் தெளிவாக பல முறை கூறி உள்ளேன். உரிய நேரத்தில் நல்ல முடிவை நிச்சயம் எடுப்போம்.
கேள்வி: தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?
பதில்: அப்படியெல்லாம் ரகசியம் ஒன்றும் இல்லை. அதுபோல் எதுவும் இருந்தாலும் வெளிப்படையாகவே பேசி கூட்டணி அமைப்போம்.
கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: அதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள். எதுவுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுதான் உண்மையாகும்.
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணியையும் அமைக்கலாம். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.
கேள்வி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. 2026-ம் ஆண்டில் நல்லது நடக்கும். நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். எனவே எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.