செய்திகள்

தமிழகத்தில் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காமல் செய்வோம்- சீமான் ஆவேசம்

Published On 2018-12-30 11:03 GMT   |   Update On 2018-12-30 11:03 GMT
தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். #seeman #pmmodi #gajacyclone

நாகப்பட்டினம்:

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாகை அவுரி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மன்சூர்அலிகான், மருது மக்கள் இயக்கம் முத்து பாண்டி, தமிழர் விடுதலை இயக்கம் வினோத், காவிரி உரிமை மீட்புக்குழு மணிமொழியன், தேசிய மீனவர் பேரவை குமரவேலு, தமிழக மீனவர் பெண் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காளியம்மாள் ரத்தினவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவின் வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 4½ லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு அள்ளி கொடுக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு முழு மையாக வழங்க மறுக்கிறது.

தமிழர்களின் வரி வேண்டும். ஆனால் அவர்களின் வாழ்க்கை குறித்து கவலையில்லை. தமிழர்களின் ஓட்டு வேண்டும். ஆனால் அவர்களின் உயிர் குறித்து கவலையில்லை என்ற நிலைப்பாட்டை தான் மத்திய அரசு கொண்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பில் ஆறுதல் கூறக்கூட பிரதமர் மோடி வரவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வாக்குகள் கேட்டு வர இருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல். மோடிக்கு கருப்புக்கொடி காட்டி, கருப்பு கொடியின் பெருமையை சிதைக்க நாங்கள் விரும்பவில்லை.

தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை. மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது’ என்றார்.  #seeman #pmmodi #gajacyclone

Tags:    

Similar News