இனி ஒருபோதும் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரமுடியாது - எடப்பாடி பழனிசாமி
- தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது.
- இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதி தேர்தல் ஆகும்.
சென்னை:
சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
ஜெயின் சமூக பாரம்பரியபடி எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் சாபா கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மணமக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமியை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இனி எப்போதும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்தில் வராது. இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதி தேர்தல் ஆகும்.
2021 சட்டமன்ற பொது தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையில் 4-ல் ஒரு பங்கு தேர்தல் அறிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்.
அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம், பகுதி ஆசிரியர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், டாக்டர்கள் ஒரு பக்கம் போராட்டம், சத்துணவு அமைப்பாளர்கள் போராட்டம், இன்று தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு மக்களுடைய வெறுப்பை சம்பாதித்த அரசு தி.மு.க. அரசு. அதனால் இந்த தேர்தலோடு மக்கள் தி.மு.க.வுக்கு விடை கொடுத்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.