செய்திகள்

தமிழ்நாட்டில் எந்த தேர்தலிலும் பா.ஜனதா வெற்றிபெற முடியாது -வைகோ பேட்டி

Published On 2018-12-08 11:13 GMT   |   Update On 2018-12-08 11:13 GMT
எந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #bjp #election

அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் இந்த அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை மற்றும் திட்ட அறிக்கையை அனுப்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது மன்னிக்க முடியாத தமிழகத்திற்கு இழைக்கப்படும் கேடாகும்.

கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்துவிட்டது. ஒன்றரை லட்சம் விவசாயக் குடும்பங்கள் அடியோடு அழிந்துவிட்டன. இனி அவர்களால் எழ முடியாது.

இதற்கு குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் கோடியாவது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் ரூ. 353 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.


பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் அதன் சரத்துக்கள் அடியோடு அழிக்கப்படும்.

ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறி வருகின்றனர். இதன் மூலம் ஒரு ரத்தக்களரி ஏற்படுத்த நினைக்கின்றனர்.

எந்த ஒரு பாசிசவாதியும் அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள். ஏதாவது ஒரு வி‌ஷயத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வர். பிரதமர் மோடியும் பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார்.

எந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #vaiko #bjp #election

Tags:    

Similar News