செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்- ஜெ.அன்பழகன்

Published On 2018-11-01 09:25 GMT   |   Update On 2018-11-01 09:25 GMT
ரஜினி காந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #JAnbazhagan
சென்னை:

தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி விமர்சித்துள்ளாரே?

பதில்:- இப்போது தி.மு.க. 8 ஆண்டாக எதிர்க்கட்சியாக உள்ளது. நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது உள்ளதைவிட எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் அதிகமாக உழைக்கிறோம்.

ஆனால் அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் வேகமாக செயல்படுவார்கள். உதாரணத்துக்கு 1996-ல் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றபோது தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 1,500 பேர் தான் கைதாகி சிறை சென்றனர்.

நிறைய கம்பெனிகளை எடப்பாடி பழனிசாமியின் சொந்தக்காரர்கள் நடத்துவதால் அவருக்கு கம்பெனி நினைப்பு வருகிறது. கூவத்தூரில் நடந்த நிகழ்ச்சி இதற்கு ஒரு சான்று.

கேள்வி:- தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளதாக பலர் குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்:- அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது ஓ.பி.எஸ். மகன் அரசியலுக்கு வந்துள்ளாரே?

தி.மு.க.வில் கலைஞருக்கு 4 மகன்கள். இதில் மு.க. ஸ்டாலின் மட்டுமே அரசியலில் பிரகாசிக்க முடிகிறது. காரணம் அவரது உழைப்பு, தியாகம், தொண்டர்களுடன் நெருங்கி பழகும் தன்மை, பொதுமக்களிடம் பரீட்சயம். இதை யார் செய்து முன்னுக்கு வருகிறார்களோ அவர்கள் மக்களால் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்றால் கலைஞரின் மற்ற 3 மகன்கள் அரசியலில் வர முடியவில்லையே. உதயநிதியை பற்றி கேட்கிறீர்கள். கமல், ரஜினி அரசியலுக்கு வரும் போது கலைத்துறையில் உள்ள உதயநிதி வருவது தவறல்ல.

என்னை பொறுத்தவரை வாரிசையும் தாண்டி உழைத்தால்தான் தொண்டர்கள் அவர்களை முன் நிறுத்துவார்கள். நான் கூட வாரிசுதான். என் அப்பா பழக்கடை ஜெயராமன் தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்தவர். கலைஞரோடு நெருக்கமாக இருந்தார். நான் படிப்படியாக கட்சியில் உழைத்து உயர்ந்து மாவட்ட செயலாளர் வரை வந்துள்ளேன். தொண்டர்கள்தான் என்னை முன் நிறுத்தினார்கள்.

கேள்வி:- கமல், ரஜினி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்:- கமல் அரசியலுக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கு அடிமட்ட பூத் கமிட்டி அளவில் ஆட்கள் கிடையாது. மேல்மட்ட அளவில் அவர் சென்றால் நடிகனாக மக்கள் பார்க்கிறார்கள்.


ரஜினி அரசியல் பிரவேசம் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு சினிமா படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவராமல் போனால் அந்த படம் ‘பிளாப்’ ஆகி விடுகிறது. அதுபோல்தான் ரஜினியின் அரசியல். 1996-ல் இருந்து அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வந்தவர். இப்போது கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வேகமாக வருவதாக கூறினார்.

இப்போது ரசிகர்களை குடும்ப வேலையை பாருங்கள். பணம் பதவியை எதிர் பார்த்து வராதீர்கள் என்று கூறி உள்ளார். எனக்கு தெரிய அவர் அரசியலுக்கு வர விருப்பப்பட மாட்டார் என்றுதான் தெரிகிறது.

கேள்வி:- கூட்டணி அமைப்பதில் கலைஞர் வல்லவர். ஆனால் மு.க. ஸ்டாலின் அதில் அந்த அளவு இல்லை என்கிறார்களே?

பதில்:- 2011-ல் இருந்து தி.மு.க. தோற்று வருவதை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்? அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் முன் வைக்கப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சனை. அதில் நாங்கள் காங்கிரசை விட்டு வெளியே வந்து நின்றோம். அதனால் தோல்வி.

2016-ல் நல்ல கூட்டணிதான் அப்போது 3-வது அணி ஓட்டுகளை பிரித்ததால் அ.தி.மு.க. சிறிது வித்தியாசத்தில்தான் ஜெயித்தது. தி.மு.க. 98 இடங்களை கைப்பற்றியது. வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வலுவான கூட்டணி அமைப்பார். மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெறும்.

கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்ததில் உங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறுகிறார்களே?

பதில்:- அப்படி எதுவும் இல்லை.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் பனியன் அணிந்து தொகுதிக்கு செல்வதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நீங்கள் பேசியதாக கூறப்படுகிறதே?

பதில்:- பேசாத வி‌ஷயத்தை பேசியதாக கூறினால் எப்படி? அறைக்குள் நடந்ததை இங்கே கேட்காதீர்கள். அப்படி நான் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #JAnbazhagan
Tags:    

Similar News