பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் கொண்டுள்ளது உண்மையான நட்பு - இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பேச்சு
- அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை
- அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக செர்ஜியோ கோர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இன்று, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்புக்குப் பின் பேசிய கோர், "அதிபர் டிரம்ப் உடன் நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பிரதமர் மோடி மீது அவர் வைத்திருக்கும் நட்பு மிகவும் உண்மையானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த நட்பு மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் டிரம்ப் உடன் உணவு அருந்தியபோது, அவர் தனது முந்தைய இந்தியப் பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான தனது சிறந்த உறவு குறித்தும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்ததாகக் கோர் கூறினார்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மீது 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.