செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதத்தை தடுக்க தீவிர பணிகள்

Published On 2018-10-08 14:10 GMT   |   Update On 2018-10-08 14:10 GMT
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது ஏற்படும் வெள்ள சேதத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வருகிறது. வெள்ளசேதத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கடலூர் மாவட்ட மேலிட பொறுப்பாளரும் வேளாண்மை துறை முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி கடலூருக்கு இன்று காலை வந்தார்.

பின்னர் கடலூர் பீமாராவ் நகர் மற்றும் சுத்துகுளம் ஆகிய பகுதியை ககன் தீப்சிங்பேடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பாதிப்புகள் மீண்டும் வராமல் இருப்பதற்கு தமிழக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இன்று ஆய்வு செய்து மீண்டும் இதே இடங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளேன்.

இதில் கடலூர் பீமாராவ் நகர் பகுதியில் கடந்த மழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு படகு மூலமாக பொதுமக்கள் வெளியே கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டது.

கடலூரில் தற்போது 80 சதவீதம் வெள்ள தடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் கெடிலம் ஆறு பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஏதேனும் குறைகள் மற்றும் பணிகள் நடைபெறாமல் இருந்தால் தங்கள் கருத்துகளை பொதுமக்கள் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் உடனடியாக அந்த பணிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தற்போது வெள்ளத்தடுப்பு பணிகளில் பல்வேறு துறைகள் அதிகாரிகள் பணிகள் செய்வதால் ஒற்றுமையுடன் பணிகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் நகராட்சியில் புயலால் ஏற்படக்கூடிய மழைநீர் நீரால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் கடலூர் கடற்கரை சாலை, தலைமை தபால் நிலையம் பகுதி, கடலூர் வில்வநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உடனடியாக வெள்ள தடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகையால் வெள்ளத் தடுப்பு பணிகள் கடலூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டது தற்போது இந்தப் பகுதிகளில் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு தற்போது கதவணைகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாய நிலங்கள் பாதிப்பில்லாமல் எப்படி பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது விவசாயிகள் வருகிற நவம்பர் 30-ந் தேதி வரை இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும். தமிழக அரசு சார்பில் அக்டோபர் 15-தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகையை விவசாயிகள் கட்டி முடித்தால் தற்போது ஏற்படக்கூடிய வடகிழக்கு பருவமழையினால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்கும்.

ஆகையால் விவசாயிகள் வருகிற அக்டோபர் 15-ந் தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகையை கட்ட வேண்டும். கடந்த 2016-2017-ம் ஆண்டு இந்திய அளவில் அதிக பயிர் இழப்பீடு தொகை தமிழகத்துக்கு 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கிடைத்தது.

இதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன் அடைந்தனர். மேலும் அந்த சமயத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த இழப்பீடு தொகை கிடைத்து பயனடைந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ககன்தீப் சிங்பேடி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அன்புச்செல்வன், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News