செய்திகள்

மயிலாடுதுறை அருகே சைக்கிள் தகராறில் வாலிபர் கொலை

Published On 2018-10-02 11:13 GMT   |   Update On 2018-10-02 11:13 GMT
மயிலாடுதுறை அருகே சைக்கிள் தகராறில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த ஊர்க்குடியை சேர்ந்த ரெங்கையன் மகன் ஜெகதீஸ் (வயது 30). விவசாய கூலி தொழிலாளி.

இவர் நேற்று மஞ்ச வாய்க்காலில் உள்ள பவானி என்பவர் வீட்டில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் அவர் சைக்கிளை எடுக்க வந்த போது அவரது சைக்கிள் செயின் துண்டாகி இருந்தது. எனவே சைக்கிளை தள்ளிகொண்டு சென்றார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் இளையராஜா என்பவர் “சைக்கிளை ஏன் தள்ளி கொண்டு செல்கிறீர்கள்” என்று கேட்டார். அப்போது சைக்கிள் செயின் அறுந்து விட்டதாக ஜெகதீஸ் கூறினார். அவரிடம் ஊர்க்குடியை சேர்ந்த “சந்திரசேகரன் மகன் முரளி உங்கள் சைக்கிளை எடுத்து ஓட்டினார். இதனால் தான் சைக்கிள் செயின் அறுந்துள்ளது” என்று இளையராஜா கூறினார்.

இதைத்தொடர்ந்து ஜெகதீஸ் முரளியிடம் “எனது சைக்கிளை ஏன் எடுத்து ஓட்டினாய்” என்று கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ் ஸ்குருடிரைவரை எடுத்து முரளி நெஞ்சில் பலமாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பலியான முரளியின் அண்ணன் மோகன்தாஸ் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.

சைக்கிளை எடுத்து ஊர்க்குடி வாலிபரை கொலை செய்த சம்பவம் ஊர்க்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News