செய்திகள்

விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம்- கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-15 12:16 GMT   |   Update On 2018-09-15 12:16 GMT
புதுச்சேரியில் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து காங்கிரசார் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #congress
புதுச்சேரி:

மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும் ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலை கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக புதுவையின் கிராமப்புற தொகுதிகளில் இருந்து பஸ், வேன்களில் காங்கிரஸ் தொண்டர்கள் சுதேசி மில் முன்பு ஒன்று திரண்டனர்.

புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த பிரமாண்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, சாரம், ராஜீவ்காந்தி சிலை வழியாக வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் நமச்சிவாயம், முதல் அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஷ்னிக் ஆகியோர் பேசினார்கள்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேல்,

முன்னாள் அமைச்சர் வல்சராஜ், பெத்தபெருமாள், மாநில துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுசெயலாளர்கள் ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, செயலாளர்கள் சாம் ராஜ், காமராஜ்,

சேவாதள தலைவர் சி.பி., குலசேகரன், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொதுசெயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், பொதுசெயலாளர் விக்கிரமாதித்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிசந்திரன் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி.யில் இணைக்கப்பட்ட சங்கத்தினர் 500 பேர் பங்கேற்றனர். #congress
Tags:    

Similar News