பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கலா? - பாராளுமன்ற குழு இன்று முடிவு
- கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு மத்திய பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும்.
இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி 1-ந்தேதி 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு இன்று முடிவு செய்கிறது.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? அல்லது 2-ந்தேதிக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி சனிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாக பிப்ரவரி 27-ந்தேதி யஸ்வந்த் சின்கா பட் ஜெட்டை தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பதிலாக 11 மணிக்கு பட் ஜெட் உரை வாசிக்கப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி ஜனாதிபதி திரவு பதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு 3 வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். அதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
2-வது கட்ட அமர்வு 4 வாரங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.