போர் சூழலில் சிக்கிய லட்சக்கணக்கான இந்தியர்கள்.. வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
- இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
- ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக கண்டித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சந்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக இஸ்ரேல் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது
துபாய், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. விமான சேவைகள் அனைத்தும் முடங்கியது.
இதற்கிடையே வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி வருகிறார்.
அந்த வகையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது சவுதி அரேபியா மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்த பிரதமர், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடன் பேசிய பிரதமர் மோடி, பஹ்ரைன் மீதான ஈரான் தாக்குதல் நிலைமை குறித்தும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசித்தார்.
இதற்கிடையே வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை ஆய்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் அவசரக் கூட்டமும் நடைபெற்றது.
போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக கண்டித்துள்ளது.