போதைப் பழக்கம் குறித்து பெற்றோரிடம் புகார் செய்த 9 வயது சிறுமியை கழுத்தறுத்து கொன்ற 13 வயது சிறுவன்
- கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்துள்ளான்.
- சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
தன்னுடைய போதைப்பழக்கம் குறித்து வீட்டில் புகார் செய்ததால் 9 வயது சிறுமியை 13 வயது சிறுவன் கொலை செய்த கொடூரம் பீகாரில் அரங்கேறி உள்ளது.
பீகாரின் கதிஹார் நகரின் கொலாசி பகுதியில் உள்ள சந்தல்பூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த சில காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்துள்ளான்.
அதே கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அச்சிறுவன் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை நேரில் கண்டு, அது குறித்து அவனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். தன் மீது புகார் செய்த சிறுமியின் மீது சிறுவன் கடும் கோபத்தில் இருந்துள்ளான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தச் சிறுமி வயலில் தனியாக இருப்பதைக் கண்ட சிறுவன், கூர்மையான ஆயுதத்தால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இரத்த வெள்ளத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று காலை குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் காவலில் எடுத்தனர்.
சிறுவன் மைனர் என்பதால், அவனை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.