ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா- அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது
- அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது.
அலங்காநல்லூர்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 5-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது. இன்று பாலமேடு, அலங்காநல்லூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழாக் குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதேபோன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் முகூர்த்தக் கால் விழா அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது.
விழாவின்போது அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அரசின் வழிகாட்டுதல் படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட தகுதியான ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.
காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. பரிசு பொருட்கள் அனைத்தும் விளம்பரதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு வழக்கம் போலவே சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.