டி20 உலக கோப்பை: வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
- இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது.
- பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது.
துபாய்:
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டில் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்கதேச வீரர் முஸ்டாபிசுர் ரகுமானுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே வங்கதேசத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விளையாட வேண்டும் இல்லையென்றால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. காணொலி அழைப்பின் மூலம் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஐ.சி.சி.யி டம் இருந்து தங்களுக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. வங்கதேசம் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசுடன் பிப்ரவரி 7-ந்தேதியும், இத்தாலியுடன் 9-ந் தேதியும், இங்கிலாந்துடன் 14-ந்தேதியும், நேபாளத்துடன் 17-ந்தேதியும் மோதுகிறது. கொல்கத்தா, மும்பையில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது.