தமிழ்நாடு செய்திகள்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்- கே.எஸ்.அழகிரி

Published On 2026-01-07 11:12 IST   |   Update On 2026-01-07 11:12:00 IST
  • அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான்.
  • எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி.

திருவாரூர்:

திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருப்பரங்குன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படாத ஒரு கல் தூணில், இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுவதை தேர்தலுக்காக சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தெய்வபக்தியும், மத உணர்வும் அவ்வளவு தான். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யவில்லை. தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான். இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி. நாங்கள் அவர்களிடம் பேரம் பேச தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க. விளிம்பு நிலைக்கு சென்று விட்டது. தமிழகத்தின் உரிமையை பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித்ஷா என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார்.

ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். கூட்டணியை பொறுத்தவரை எங்களை போன்ற தெளிவு அவர்களிடம் இல்லை என்றார்.

Tags:    

Similar News