செய்திகள்

அதிக லக்கேஜ் எடுத்துச்செல்ல ரெயில் பயணிகளுக்கு தடை

Published On 2018-06-05 05:21 GMT   |   Update On 2018-06-05 05:21 GMT
பயணிகள் குறிப்பிட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ் எடுத்து வந்தால் அந்த கூடுதல் எடைக்கு கட்டணம் வசூலிக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை:

ரெயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக லக்கேஜ் கொண்டு செல்வதால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து தென்னக ரெயில்வே ரெயில் பயணிகளுக்கு உடமைகளை எடுத்துச் செல்லும் வி‌ஷயத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் குறிப்பிட்ட அளவு லக்கேஜ் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 3-ம் வகுப்பு குளிர்சாதன ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் தலா 50 கிலோ எடை கொண்ட லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் தலா 85 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

பயணிகள் குறிப்பிட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ் எடுத்து வந்தால் அந்த கூடுதல் எடைக்கு கட்டணம் வசூலிக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது 6 மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு பயணிகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது. வருகிற 8-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இதுபற்றி பயணிகளிடம் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூடுதல் லக்கேஜ் எடுத்து வந்தால் அதற்கு கட்டணம் செலுத்துவதற்கு ரெயில் நிலையங்களில் தனி கவுண்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய பிறகு அதிகபட்சமாக ஒரு பயணி 150 கிலோ எடை வரை லக்கேஜ் கொண்டு செல்ல முடியும்.

படுக்கை வசதி மற்றும் 2-ம் வகுப்பு பயணிகள் தலா 50 கிலோ, 45 கிலோ எடை உள்ள லக்கேஜுகளை வழக்கம் போல் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதிகபட்சமாக இந்த வகுப்பு பயணிகள் 80 கிலோ எடை வரை பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். #Train
Tags:    

Similar News