கடும் பனிப்பொழிவு - நீலகிரியில் 10 ஆயிரம் ஏக்கர் தேயிலை செடிகள் பாதிப்பு
- உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.
- தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நடப்பாண்டு நீலகிரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிமாக உள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது.
ஊட்டி நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியை எட்டியது. தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி வரை நிலவியது.
இதன் காரணமாக ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று உறைபனி படிந்து காணப்பட்டது. உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.
இதற்கிடையே மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் மற்றும் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கம் காணப்படுகிறது. தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2020-க்கு முன்பு பனிப்பொழிவால் 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பில் தேயிலை செடிகள் கருகின. 2021-22-ல் பனிப்பொழிவு குறைந்ததால் 1,200 ஏக்கர் மட்டுமே தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் நடப்பு பருவத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலை செடிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறும்போது, தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக நிழல் தரும் சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். கொப்புள நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றினால், தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்கலாம் என்றனர்.